உங்களுடைய அமர்வுகளை அலங்கரித்துக் கொள்ளுங்கள்

عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي
 فان صلاتكم علي نور لكم يوم القيامة.
( 278رواه الديلمي (القول البديع ص

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உங்களுடைய அமர்வுகளை என் மீது ஸலவாத்து சொல்வதைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக என் மீது நீங்கள் கூறும் ஸலவாத்து கியாமத்து நாளில் உங்களுக்கு ஒளியாகும்".

ஸலவாத்து ஓதுவதினால் கிடைத்த நற்செய்தி:

முஹம்மது பின் மாலிக் (ரஹ்) அவர்கள்  கூறினார்கள்: காரீ அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்ளிடம் கல்வி கற்பதற்காக நான் பக்தாதுக்கு சென்றேன். அவர்களைச் சுற்றி அமர்ந்து நாங்கள் ஓதிக்கொண்டிருக்கும் போது ஒரு முதியவர் அவருடைய தலையில் மிகவும் பழைய தலைப்பாகையுடன் கந்தலான ஆடை அணிந்தவராக, தோலில் மிகவும் பழைய துண்டுடன் உள்ளே நுழைந்தார். அவர் நுழைவதைப் பார்த்தவுடன் அபூபக்கர் (ரஹ்) அவரகள் மரியாதை இன்னும் கண்ணியத்துடன் எழுந்து நின்றார்கள். தன்னுடைய இடத்திலிருந்து எழுந்து அந்த இடத்தில் முதியவரை அமர வைத்து அவருடைய நலன் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் நலன் விசாரித்தார்கள்.

அந்த முதியவர்: "நேற்று இரவு எனக்கு ஒரு மகன் பிறந்தான். என்னுடைய மனைவி என்னிடம் வெண்ணெயும், தேனும் கேட்டாள். ஆனால், என்னால் அதனை வாங்கிக் கொடுக்க முடியவில்லை" என்று கூறினார்.

இந்த முதியவர் ஏழ்மையின் மிகப் பெரும் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கேட்ட அபூபக்கர்(ரஹ்) அவர்கள் மிகவும் கவலையடைந்த நிலையில் தங்களுடைய கண்களை மூடினார்கள். அப்பொழுது அவர்கள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அபூபக்கரே ஏன் இந்த கவலை? அமைச்சர் அலி பின் ஈஸா (ரஹ்) அவர்களிடம் சென்று என்னுடைய ஸலாமைக் கூறிவிட்டு, நீங்கள் வெள்ளி இரவு ஆயிரம் முறை ஸலவாத்துச் சொல்லாமல் தூங்குவதில்லை. ஆனால், இந்த வெள்ளி இரவு நீங்கள் எழுநூறு ஸலவாத்துகள் தான் ஓதினீர்கள், அதற்குள் அரசனின் தூதன் வந்து உங்களை அரசர் அழைப்பதாக கூறினார். நீங்கள் அங்கு சென்றுவிட்டீர்கள். பிறகு நீங்கள் திரும்பியவுடன் மீதமுள்ள ஸலவாத்தை ஓதி முடித்தீர்கள். இதனை கூறிவிட்டு அவரிடம் பிறந்த அந்த குழந்தைக்கு அதனுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள நூறு தங்க நாணயங்களை (தீனார்களை) அந்த குழந்தையின் தந்தைக்கு தருமாறு கூறுங்கள்" என்றார்கள்.

காரீ அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள் உடனே எழுந்து அந்த முதியவரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடம் சென்றார்கள். அங்கே சென்ற பிறகு அமைச்சரைப் பார்த்து, நபி (ஸல்) அவர்கள் இந்த மனிதரை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டவுடன் அமைச்சர் எழுந்து தன்னுடைய இடத்தில் அந்த முதியவரை அமர வைத்தார்கள். காரீ அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள் நடந்த சம்பவங்களை சொல்லிக் காண்பித்தார்கள். அமைச்சர் மிகவும் மகிழ்ச்சியடைநது உற்சாகமானார்.

உடனே தன்னுடைய பணியாளை அழைத்து பணப்பையை எடுத்து வரச் சொல்லி அங்கேயே நூறு தீனார்களை அந்த முதியவருக்கு கொடுத்தார். மேலும் நூறு தீனார்களை எடுத்து அபூபக்கர் முஜாஹித் (ரஹ்) அவர்களுக்கு கொடுத்தார். ஆனால், அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். ஆனால், அமைச்சர் மிகவும் நிர்பந்தப்படுத்தி கூறினார்: இதனை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால், நீங்கள் எனக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள். எனக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் நடந்த விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள். யாருக்கும் இது தெரியாது. மீ்ண்டும்  நூறு தீனார்களை எடுத்து, இது நீங்கள் எனக்கு கொண்டு வநத நல்ல செய்திக்காக. நபி (ஸல்) அவர்களுக்காக நான் ஓதிய ஸலவாத்தை நபியவர்கள் கவனிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்து என்னை ஆனந்தம் அடையச் செய்துவிட்டீர்கள். மீண்டும் நூறு தீனார்களை எடுத்து, இது இந்த செய்தியை என்னிடம் கொண்டு வருவதற்காக எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக. என்று மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து நூறு தீனார்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஆயிரம் தீனார்களை கொடுத்துவிட்டார்கள். என்றாலும், காரீ அபூபக்கர் முஜாஹித் (ரஹ்) அவர்கள் எதனையும் எடுத்துச் செல்ல மறுத்துவிட்டுக் கூறினார்கள்: ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எங்களிடம் நூறு தீனார்களை மட்டும் தான் வாங்கி வரச் சொன்னார்கள். எனவே, அதைவிட அதிகமாக எதனையும் நாங்கள் எடுத்துச் செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

يَا رَبِّ صَلِّ وَ سَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الخَلْقِ كُلِّهِمِ

No comments:

Post a Comment